மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் - பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், மற்றும் முதல்வர் மரியாதை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள். அவரை நாம் தேசப்பிதா, தேசதந்தை என்று அழைக்கிறோம். இன்று இவரது 75ம்ஆண்டு நினைவுதினம் நாடுமுழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் அவரது திருவுருவசிலைக்கு காந்தியவாதிகள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அதன்படி, சென்னை,எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது திருவுருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செய்தனர். இதனைதொடர்ந்து, 'காந்தியும், உலக அமைதியும்' என்னும் புகைப்பட கண்காட்சியை இவர்கள் திறந்து வைத்து புகைப்படங்களையும் பார்வையிட்டனர். இதில் மகாத்மா காந்தி உலகம் முழுவதும் பயணம் செய்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைவர்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தினர்
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இவரை தொடர்ந்து சபாநாயகர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரை வணங்குகிறேன். அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. மேலும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம் என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.