LOADING...
மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் நிலநடுக்கம்: உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்பு
உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்பு

மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் நிலநடுக்கம்: உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
09:29 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு மாபெரும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களின் பதவியை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், இன்று மதியம் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் (Anti-defection law) தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்க, உத்தவ் அணியில் உள்ள மொத்தம் 9 எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3rd) பலத்தை பெற குறைந்தது 6 உறுப்பினர்கள் தேவை. தற்போது 6 எம்பிக்களும் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளதால், உத்தவ் தாக்கரேவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆபரேஷன் டைகர்

'ஆபரேஷன் டைகர்' மற்றும் உத்தவ் தாக்கரேவின் அவசர கூட்டம்

இந்த திடீர் அரசியல் திருப்பம் 'ஆபரேஷன் டைகர்' என்ற பெயரில் ஆளும் கூட்டணியால் ரகசியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் மேலும் சிதறிவிடாமல் தடுப்பதற்காக, உத்தவ் தாக்கரே திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு நரிமன் பாயிண்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான 'சிவாலய்'-ல் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிர சட்டசபையின் பருவமழை கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே இந்த விவகாரம் வெடித்துள்ளதால், அங்கு அரசியல் களம் சூடேறியுள்ளது.

காரணம்

அதிருப்திக்கு காரணம் என்ன? எம்பிக்கள் ஓப்பனாக விளக்கம்

டெல்லியில் ஜூன் 17 அன்று நடைபெற்ற சிவசேனா (UBT) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த சஞ்சய் தினா பாட்டீல், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், பாபுசாகேப் வக்சௌரே, நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் மற்றும் ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கர் ஆகிய 6 எம்பிக்களே தற்போது அணி மாறுகின்றனர். இதில் ஹிங்கோலி எம்பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் மற்றும் தாராஷிவ் எம்பி ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கர் ஆகியோர் தங்களின் முடிவை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளனர். தங்கள் மீது "வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களும், அவதூறான வார்த்தைகளும்" தங்களை வேதனைப்படுத்தியதால், இனி இந்த கட்சியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என தோன்றியதாகவும், அதனால், சிவசேனாவின் மற்றொரு பிரிவிற்கு மாறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement