Loading...
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2026
07:53 am

செய்தி முன்னோட்டம்

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேகம் தொடர்பான ஆரம்பக்கட்டப் பூஜைகள் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. கடைசியாக 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஐதீகம் உள்ள நிலையில், 2018 பிப்ரவரி 2 அன்று கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பணிகள் தாமதமாகின. கோவில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன திருப்பணி மற்றும் யாகசாலை பூஜைகளுக்காக உபயதாரர்களிடமிருந்து மொத்தம் ரூ.21 கோடி பெறப்பட்டுள்ளது.

நிகழ்வுகள்

யாகசாலை பூஜைகள் மற்றும் முன்நிகழ்வுகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் முக்கிய வழிபாட்டு நிகழ்வுகளின் விவரம்:

செப்டம்பர் 6: காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் தொடக்கம்.

செப்டம்பர் 7: காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை நவகோள் யாகவேள்வி.

செப்டம்பர் 8 & 9: வாஸ்து சாந்தி மற்றும் வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்தல், மாலையில் புனித மண் எடுத்தல் நிகழ்வுகள்.

செப்டம்பர் 10: பேரொளி வழிபாடு மற்றும் மாலையில் முளைப்பாரி இடுதல்.

செப்டம்பர் 11 - 17: செப்டம்பர் 11 மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, செப்டம்பர் 17 காலை வரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக சுபமுகூர்த்த நேரம்

17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடைபெறுகிறது.

காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மீனாட்சி அம்மன் மூலஸ்தானத்திற்கும், காலை 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT