Page Loader
அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Dec 19, 2023
01:39 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி. கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர் மீதும் இவரது மனைவி மீதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கினை மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.

வழக்கு 

தண்டனை குறித்த விவரங்கள் வரும் 21ம் தேதி தெரிவிக்கப்படும் - நீதிபதி 

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 39 சாட்சியங்களிடம் மேற்கொண்ட புலன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மைத்தன்மை இல்லை என்று அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று(டிச.,19) இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பின் படி, 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால் அமைச்சர் பொன்முடியின் விடுதலை செல்லாது என்று கூறி நீதிபதி அவரது விடுதலையை ரத்து செய்துள்ளார். மேலும் வரும் 21ம் தேதி இவ்வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் காலை 10.30 மணியளவில் தெரிவிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, அன்று அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.