தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் சூதாட்டம் போன்ற ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல சர்ச்சைகளுக்கு பின்னர் கால தாமதமாக ஒப்புதல் வழங்கினார்.
அதனையடுத்து இதுகுறித்த அரசாணையினை மாநில அரசு வெளியிட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்தினை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதன்படி இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அமர்வின் முன்னிலையில் வந்தது.
தடை
ஆன்லைன் ரம்மி-போக்கர் விளையாட்டுக்கான தடை ரத்து
அப்போது, இதுபோன்ற தடை சட்டத்தினை இயற்றி அமல்படுத்த அரசுக்கு அதிகாரமில்லை.
திறமைக்கான விளையாட்டாக பார்க்கப்படும் ரம்மி, அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக பார்க்க முடியாது என்று பல்வேறு வாதங்களை சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் முன்வைத்தது.
இதனைத்தொடர்ந்து, இச்சட்டத்தினை இயற்ற அரசுக்கு அதிகாரமுள்ளது,
இந்த விளையாட்டால் தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள் அதிகரித்ததன் காரணமாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்ததோடு எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட பின்னர் நீதிபதிகள் இவ்வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று(நவ.,9)வெளியாகியுள்ளது.
அதில், அதிர்ஷ்டத்திற்கான ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும். அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் ரம்மி-போக்கர் விளையாட்டுக்கான தடை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.