பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
திமுக முன்னாள் அமைச்சர் கே. பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட (PMLA) வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளி அரசுக்கு ரூ.28.37 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்த மூல வழக்கில் பொன்முடி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
விடுதலை
செம்மண் குவாரி விவகாரமும் கீழமை நீதிமன்ற விடுதலையும்
விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு தொடர்ந்த மூல வழக்கின் அடிப்படையில், ஈட்டிய வருவாயை ஹவாலா வழிகளில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகக் கூறி அமலாக்கத்துறை பொன்முடி மீது பிஎம்எல்ஏ வழக்குப் பதிவு செய்திருந்தது.
இவ்வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு அனுமான அடிப்படையிலானது என்றும் கூறி பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரையும் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இறுதித் தீர்ப்பு
உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலும்
மூல வழக்கில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மூல வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு பிஎம்எல்ஏ நடவடிக்கைகள் நீடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற விதியை ஏற்றுக்கொண்டு வழக்கை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பு பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.