தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன்
இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பா.ஜ.க.வினர் பங்கேற்றனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசுகையில், ராணுவ வீரர்கள் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்கள். அவர்களை சீண்டினால் தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல. இங்குள்ளவர்கள் அனைவரும் குண்டு வைப்பதில், துப்பாக்கி சுடுதல், சண்டையிடுவதில் மிக கெட்டிகாரர்கள். இவை அனைத்தும் எங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் நாங்கள் இதை செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று மிரட்டல் விடும் வகையில் பேசினார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய முன்னாள் ராணுவ கர்னல்
இதனை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இரு பிரிவினர் இடையில் மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கர்னல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். அவரின் மன்னிப்பினை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.