ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை
இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து இன்று(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பா.ஜ.க.வினர் தொண்டர்கள் மத்தியில் திமுக அரசை கண்டித்து பேசியது. அப்போது முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசுகையில், ராணுவ வீரர்கள் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்கள். அவர்களை சீண்டினால் தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல என்று கடுமையாக பேசினார்.
குண்டு வைப்பதாக ஆவேசமாக பேசிய முன்னாள் ராணுவ வீரர்
தொடர்ந்து பேசிய அவர், இங்குள்ளவர்கள் அனைவரும் குண்டு வைப்பதில், துப்பாக்கி சுடுதல், சண்டையிடுவதில் மிக கெட்டிகாரர்கள். இவை அனைத்தும் எங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் நாங்கள் இதை செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று மிரட்டல் விடும் வகையில் பேசினார். இது குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரராக இருந்துகொண்டு, மிரட்டும் தொனியில் பேசுகிறீர்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர், ஆம் மிரட்டல் தான் என்றும், இனிமேல் இதுபோல் கொலை நடந்தால் குண்டு வைப்போம் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார். இவரது இந்த பேச்சும், செய்தியாளர்களிடம் அளித்த பதிலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.