ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
இந்திய ராணுவவீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக'வினரின் அத்துமீறல்களும், அராஜகங்களும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டை காக்கும் பிரபு என்னும் ராணுவவீரர் பட்டப்பகலில் திமுக நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக பட்டியலின பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லம் மற்றும் காரின் மீதும் கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. இதனால் துப்பாக்கிஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்புக்கு நியமிக்கக்கோரி அவர் பலமுறை மனுஅளித்தும் இன்னும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மதுவால் ஏற்படும் தீமைகள் அறிந்தும், அதிலிருந்து வரும் அதிகளவு லாபத்திற்காக மக்களை மதுவுக்கு அடிமையாக திமுக அரசு மாற்றிவருகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் உண்ணாவிரதம்
மேலும் அதில் அவர், பணத்தையும் இலவசத்திற்கும் மக்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் திமுக அரசு மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களையே கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து பிப்ரவரி 21ம்தேதி அறப்போராட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இருண்டக்காலத்தை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த போராட்டம். நாளை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் துவங்கி, போர் நினைவுச்சின்னம் வரை திராவிடமாடல் இருளை போக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் காலை 9.30மணியளவில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவானந்த சாலையில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.