'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' - இயக்குனர் கௌதமனின் பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி இயக்குனர் கௌதமன் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த இலங்கை ஈழப்போரின் இறுதிக்கட்ட போர் களத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் பிப்.,17ம் தேதி இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உலக தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், 'பிரபாகரன் உயிருடன் மிகவும் நலமாக இருக்கிறார்' என்றும்,'இத்தகவலை அவரது குடும்பத்தார் அனுமதியுடன் வெளியிடுகிறேன்' என்றும் கூறினார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையினை கிளப்பிய நிலையில், யாரும் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை.
குழப்பம்
துவாரகா பிரபாகரன் வருகையினை வரவேற்க வேண்டும் - இயக்குனர் கௌதமன்
இதனிடையே, "பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகாவுடன் நலமாக வாழ்ந்து வருகிறார்" என்று இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கௌதமன் கூறியிருப்பது மீண்டும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,"பிரபாகரன் மகளான துவாரகா பிரபாகரன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம் பிரபாகரன் குறித்து நான் வினவினேன். அதற்கு அவர் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் அப்பாவும், அம்மாவும் நலமாக உள்ளனர் என்று பதிலளித்தார்"என்று கூறியுள்ளார்.
மேலும், மாவீரர் நாளான இன்று(நவ.,27)மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா பிரபாகரன் காணொளிக்காட்சி மூலம் தோன்றி உலக தமிழர்களிடம் உரையாற்றவுள்ளார் என்று கூறிய அவர், அவரின் வருகையினை மத்திய-மாநில அரசு வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.