வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தை முடித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு, பிரதமர் மோடி நாட்டு பெண்களுக்கு வழங்கும் பரிசு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உஜ்வாலா(PMUY) திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூ.400 குறைக்கப்பட உள்ளது. "உஜ்வாலா திட்டத்தின் மூலம் 9.6 கோடி பெண்கள் பயனடைகின்றனர். ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, பெண்களுக்கு பிரதமர் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்: மத்திய அரசு
"வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பயனர்களுக்கும் நம் நாட்டுப் பெண்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் பரிசு இது" என்று தாக்கூர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், PMUY திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மே 2016இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா(PMUY) திட்டம், அரசாங்கத்தின் ஒரு முக்கிய சமூக நல முயற்சியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருள் வழங்குவதே இதன் நோக்கமாகும்.