கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள்
கேரளா ஆலுவா பகுதியில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அருகேவுள்ள ஆற்றில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் பாலம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மகா சிவராத்திரிக்கு அந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் அந்த பாதை வழியே நடந்து சென்றனர். ஆனால் அவர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பாலத்தின் கைப்பிடி கம்பிகளில் பல பூட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தது. கைப்பிடிகளை இணைத்தவாறு பூட்டப்பட்டுள்ள இந்த பூட்டுகள் காதல் ஜோடிகளால் போடப்பட்டவை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விழாக்காலங்கள் அல்லாத போது இந்த கோயிலுக்கு நிறைய காதல் ஜோடிகள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் காதல் பிரியாமல் இருக்கவும், அவர்கள் காதல் கைக்கூடி கல்யாணம் நடக்கவும் வேண்டிகொண்டு இவ்வாறு பூட்டுகளைப்பூட்டி செல்கிறார்கள் என்று கூறினர்.
இடையூறாக தொங்கும் பூட்டுகள் - அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆற்று பாலத்தில் இதுபோல் பூட்டுகளை பூட்டும் வழக்கத்தை இப்பகுதியிலுள்ள காதல் ஜோடிகள் புதிதாக துவங்கியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இது மேற்கத்திய கலாச்சாரம் ஆகும். அங்குதான் காதலர்கள் இதுபோல் ஆற்றுப்பாலங்களில் பூட்டுகளை போட்டு அதன் சாவியினை ஆற்றில் எரிந்துவிட்டு செல்வார்கள். தற்போது இந்த வழக்கம் கேரளாவின் ஆலுவா பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இங்கும் அதேபோன்று பூட்டுகளை போட்டு சாவியினை ஆற்றில் வீசி செல்வதால் கைப்பிடி கம்பிகளில் அவிழ்க்க முடியாமல் பல பூட்டுகள் தொங்கிய வண்ணம் உள்ளது. இது அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. அதனால் அங்கு தொங்கும் பூட்டுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.