லோக்சபாவில் விவாதமின்றி 2 மசோதாக்கள் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், லோக்சபாவில் இன்று மேலும் இரு மசோதாக்கள் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026-ஐ கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதர் முன்மொழிய, அதுவும் விவாதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
மசோதா
விவாதங்களின்றி நிறைவேறும் மசோதாக்கள்; வீணாகும் மக்கள் வரிப்பணம்
நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் லோக்சபாவில் இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றில் இரண்டு மசோதாக்கள் மீது மட்டுமே முறையான விவாதம் நடைபெற்றுள்ளது என்பதும், மீதமுள்ள 9 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் அமளி காரணமாக லோக்சபா நாளை (ஆகஸ்ட் 12) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் மற்றும் அமளி தொடர்வதால் அவையின் இயல்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பார்லிமென்ட் செயல்படாமல் முடங்குவதால் ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், தொகுதிப் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச முடியாமல் ஜனநாயகப் பின்னடைவு ஏற்படுவதாக கவலை எழுந்துள்ளது.