நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்
நாடாளுமன்றம் தேர்தல் முன்னரே வர வாய்ப்புள்ளது என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர், "தமிழ்நாடு மாநிலம் முழுவதும் திமுகவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை நிர்வாகிகள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்ப்பதில் உள்ள முக்கியத்துவத்தினை விட, இறந்தவர்கள் பெயரினை நீக்கி, தேர்தல் நடக்கும் தினத்தில் அவர்கள் உயிர்த்தெழுந்து வராமல் தடுப்பது மிக முக்கியமான ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் முன்னரே வர வாய்ப்புள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தொண்டர்கள் ஈடுபட தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் பல திமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து அந்த கடிதத்தில் அவர், விரைவில் நாடாளுமன்றத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நமது கழகத்தினர் கவனம் செலுத்தி பணிபுரிந்தால் எதிரிகளை உமிப்போல் ஊதிவிட்டு, வெற்றியென்னும் அரிசியினை குவிக்கலாம். கடந்த அதிமுக கட்சியின் ஆட்சியில் பல திமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக மீது அவதூறு கூறப்படுவதும், திமுக ஆட்சிக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளும் வரும் காலங்களில் அதிகம் ஏற்படக்கூடிய நிலையில், கவனித்து செயல்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து,"நாடாளுமன்ற தேர்தல் களம் நம்மை அழைக்கிறது, ஜனநாயகம் காக்கும் வீரர்களான உடன்பிறப்புகளே இதற்கு தயாராகுங்கள்"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே திருச்சியில் வரும் 26ம்தேதி முதல்வர் தலைமையில் வாக்குச்சாவடி பயிற்சி முகவர்களின் பாசறை பயிற்சிக்கூட்டம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.