இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
செய்தி முன்னோட்டம்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதன் மூலம் லோக்சபாவின் மொத்த இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டைச் சிக்கலின்றி அமல்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். புதிய வரைவு மசோதாவின்படி, மொத்தமுள்ள 850 இடங்களில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும். தற்போதுள்ள 530 மாநில இடங்கள் மற்றும் 13 யூனியன் பிரதேச இடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய உயர்வாகும்.
மாற்றங்கள்
மாநில வாரியான மாற்றங்கள்: யாருக்கு எவ்வளவு?
அரசு பின்பற்றும் "Pro-rata" விரிவாக்க முறையின்படி, ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய இடங்களும் சுமார் 56% வரை அதிகரிக்கப்படும். இதன் மூலம் எந்த மாநிலத்தின் அரசியல் பலமும் குறையாமல் பார்த்துக்கொள்ள அரசு முயல்கிறது. உத்தரப் பிரதேசம்: 80-லிருந்து 125 இடங்களாக உயரும். பீகார்: 40-லிருந்து 62 இடங்களாக உயரும். மகாராஷ்டிரா: 48-லிருந்து 75 இடங்களாக உயரும். தமிழ்நாடு: 39-லிருந்து 61 இடங்களாக உயரும். கேரளா: 20-லிருந்து 31 இடங்களாக உயரும்.
விவாதம்
வடக்கு - தெற்கு இடையிலான விவாதம்
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள், தொகுப்பு மறுசீரமைப்பால் தங்களது அரசியல் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தன. இதனைத் தவிர்க்கவே 2011 தரவுகளை அரசு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு சதவீத அடிப்படையில் உயர்வு சமமாக இருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் (45 புதிய இடங்கள்) பெறும் ஆதாயம், தமிழ்நாட்டை (22 புதிய இடங்கள்) விட இருமடங்காக உள்ளது. இது "வடக்கு - தெற்கு" இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
மகளிர்
மகளிர் இடஒதுக்கீட்டின் பங்கு
இந்த 850 இடங்கள் கொண்ட மாடலில், 283 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 567 இடங்கள் பொது மற்றும் பிற பிரிவினருக்கு இருக்கும். இதன் மூலம் தற்போதைய எம்.பி.க்களின் எண்ணிக்கையை விட அதிகமான இடங்கள் பொதுப்பிரிவினருக்குக் கிடைக்கும் என்பதால், அரசியல் ரீதியான எதிர்ப்புகள் குறையும் என மத்திய அரசு நம்புகிறது. இந்தத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை இருந்தாலும், பிஜேடி (BJD), ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) போன்ற கட்சிகளின் ஆதரவு இதற்குத் தேவைப்படும். 2029 தேர்தலுக்குள் 850 தொகுதிகளுக்கான வரைபடத்தைத் தயார் செய்ய, ஜூன் 2026-க்குள் 'தொகுதி மறுவரையறை ஆணையத்தை' அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.