வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
செய்தி முன்னோட்டம்
அரசு தேர்வுகளில் நடக்கும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'மோசடி தடுப்பு' மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா இனி ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாக்கப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
போட்டித் தேர்வுகளை நல்லெண்ணத்துடன் எழுதும் மாணவர்கள் (அதாவது, மோசடி செய்வதன் மூலம் தெரிந்தே லாபம் தேடாத தேர்வர்கள்) இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்வுத் தாள்களை கசியவிடுதல், விடைத்தாள்களை சீர்குலைத்தல் போன்ற மோசடிகளை செய்பவர்களுக்கு இந்த மசோதாவின்படி, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.
மக்களவை
பொதுத் தேர்வுகள் மசோதாவின் விவரங்கள்
இந்த மசோதாவின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாதவையாகும். அது போன்ற குற்றங்களை சமரசம் செய்வதன் மூலம் தீர்க்க முடியாது.
இந்த மசோதாவை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
கேள்வி தாளை கசியவிடுவது, தேர்வர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்வது ஆகியவை இதில் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பண ஆதாயத்திற்காக போலி இணையதளம் உருவாக்குதல், போலி தேர்வுகளை நடத்துதல், போலி அனுமதி அட்டைகளை வழங்குதல், போலி சலுகை கடிதங்களை வழங்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த மசோதாவின் கீழ், யாரேனும் வினா தாளைக் கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 10 லட்சம் வரை அபராதத்துடன் இது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.