மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 6 இடங்களிலும், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்களிலும் வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா மூன்று இடங்களிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு இடத்திலும் இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.
2ஆம் கட்ட வாக்குப்பதிவு
முன்னதாக, 89 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் தொகுதியில் வாக்குப்பதிவு தேதி மாற்றியமைக்கப்பட்டது. பெதுல் தொகுதி மூன்றாம் கட்டமாக மே 7 ஆம் தேதி வாக்களிக்க உள்ளது. 2019 ஆம் ஆண்டில், ஆளும் பாஜக தலைமையிலான NDA இந்த 89 இடங்களில் 56 இடங்களை வென்றது, எதிர்க்கட்சியான UPA 24 இடங்களைப் பெற்றது. இன்றைய முக்கியப் போட்டியாளர்களில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர், கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமியும் உள்ளனர்.