LOADING...
புனே தொழிலதிபர் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: நிச்சயித்த பெண்ணே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம்!
கேதன் விஷால் அகர்வால், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்

புனே தொழிலதிபர் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: நிச்சயித்த பெண்ணே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம்!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2026
07:29 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த 26 வயது இளம் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால், லோஹாகர் கோட்டையின் 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்து என்று கருதப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் கேதனின் காதலியான சியா கோயல் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து செய்த பக்கா திட்டம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடு

காதல் ஜோடியும் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகளும்

புனே காரஹுஞ்சே பகுதியை சேர்ந்த கேதன் விஷால் அகர்வால், ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கும் சியா கோயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2026-இல் பெரியோர்களால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் நடக்கவிருந்தது. இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் எனப் பல லட்சங்கள் செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

காதலன்

ரகசிய காதலன் சேத்தன் சௌத்ரி

குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தபோது, சியா கோயல் புனே கொண்ட்வா பகுதியைச் சேர்ந்த 22 வயது சேத்தன் பாபுலால் சௌத்ரி என்ற இளைஞருடன் தீவிர காதலில் இருந்துள்ளார். கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 18 வரையிலான ஆறு மாதங்களில் மட்டும், சியாவும் சேத்தனும் சுமார் 2,004 முறை போனில் பேசியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 238 மணிநேரம் அவர்கள் உரையாடியுள்ளனர். கேதனுடன் நடக்கவிருந்த திருமணத்தில் சியாவிற்கு துளியும் விருப்பமில்லை. ஆனால், திருமணத்தை நிறுத்த மறுத்த சியா, கேதனைத் தனது பாதையிலிருந்து நிரந்தரமாக அகற்ற காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

Advertisement

கொலை முயற்சி

முதல் கொலை முயற்சி

திருமணத்திற்கு முன்பு கேதன் பாலி தீவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மும்பை விமான நிலையம் சென்றபோது கேதனின் பாஸ்போர்ட் மட்டும் மாயமாகியிருந்தது. சியா திட்டமிட்டே கேதனின் பாஸ்போர்ட்டைத் திருடி அழித்துள்ளார். ஏனெனில், வெளிநாடு சென்றால் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதால் இந்தச் சதியை சியா செய்துள்ளார். ஜூன் 14 அன்று கேதனை லோஹாகர் கோட்டைக்கு சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலன் சேத்தன் உதவியுடன், திடீரென பாம்பு இருப்பது போன்ற பயத்தை உருவாக்கி, கேதனைப் பள்ளத்தாக்கில் தள்ள முயன்றனர். ஆனால், கேதன் சுதாரித்துக் கொண்டதால் முதல் முயற்சி தோல்வியடைந்தது.

Advertisement

கொலை

பிறந்தநாள் பிக்னிக்: ஜூன் 18 கொடூரக் கொலை

முதல் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று வரவிருந்த தனது பிறந்தநாளை கோட்டையிலேயே கொண்டாட வேண்டும் என ஆசை வார்த்தை கூறி, ஜூன் 18 அன்று கேதனை மீண்டும் அதே லோஹாகர் கோட்டைக்கு சியா வரவழைத்துள்ளார். விசாரணையில், தொழில்நுட்ப கண்காணிப்பில் சிக்காமல் இருக்க சேத்தன் தனது அலைபேசியை கடையிலேயே வைத்துவிட்டு, ஊழியரின் மொபைலை எடுத்துக்கொண்டு ரகசியமாகக் கோட்டைக்கு வந்துள்ளார். கோட்டையின் உச்சிக்கு சென்றவுடன், சியாவும் சேத்தனும் சேர்ந்து கேதனை ஒரு கனமான பொருளால் பலமாகத் தாக்கி, 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் தூக்கி வீசியுள்ளனர்.

துப்பு

இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் போலீசாரின் துப்பு துலக்கல்

கொலையை செய்துவிட்டு, கேதன் புகைப்படம் எடுக்கும்போது கால் தவறி விழுந்துவிட்டதாக சியா போலீசாரிடம் நாடகமாடினார். மேலும், மறுநாள் தனது பிறந்தநாளின் போது, "என்னை என் பிறந்தநாளில் தவிக்கவிட்டு சென்றுவிட்டாயே, என் காதல் உனக்குத் தெரியவில்லையா?" என இன்ஸ்டாகிராமில் கண்ணீர் மல்க உருகி ஒரு பதிவையும் வெளியிட்டார். ஆனால், கேதன் ஒரு அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர் என்பதால் அவர் அவ்வளவு எளிதாகக் கால் தவற வாய்ப்பில்லை எனப் பெற்றோர் சந்தேகித்தனர். மேலும், இறுதிச்சடங்கின் போது சியாவின் முகத்தில் எந்த வருத்தமும் இல்லாதது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து, லோனாவாலா ஊரகப் போலீசார் இவர்களின் மொபைல் அழைப்புகள், டவர் லொகேஷன் மற்றும் சேத்தனின் இன்டர்நெட் துண்டிக்கப்பட்ட விபரங்களை சேகரித்து இருவரையும் கைது செய்தனர்.

காவல்

நீதிமன்ற காவல்

கைதான சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி இருவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, புனே மாவட்ட நீதிமன்றம் அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. "என் மகனை வேண்டாம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் திருமணத்தை நிறுத்தியிருப்போம், இப்படிப் பண்ணிவிட்டார்களே" என கேதனின் பெற்றோர் கதறி அழுது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியுள்ளனர்.

Advertisement