ஓய்வூதியம் பெறுபவர்களே அலெர்ட்; ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இனி நேரில் செல்ல தேவையில்லை
செய்தி முன்னோட்டம்
ஓய்வூதியதாரர்கள் தாங்கள் தொடர்ந்து பென்ஷன் பெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிப்பது ஒரு கட்டாய நிதி நடவடிக்கையாகும். ஓய்வூதியப் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், மோசடிகளையும் தடுப்பதற்காக, ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் (PDAs) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன் இந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், 80 வயதுக்கு மேற்பட்ட அதிமூத்தக் குடிமக்களுக்கு, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரைச் சமர்ப்பிக்கக் கூடுதல் ஒரு மாத அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல்
வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பு
ஓய்வூதியதாரர்கள், தங்கள் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழைப் பெறவும், சமர்ப்பிக்கவும் அரசாங்கம் டிஜிட்டல் வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண், மொபைல் எண், PPO எண், ஓய்வூதியக் கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்கள் ஆகிய ஆவணங்களை இதற்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகளும் தேவைப்படும்.
ஆன்லைன்
ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிகள்
ஜீவன் பிரமாண் (Jeevan Pramaan) போர்ட்டல்: பயோமெட்ரிக் சாதனத்துடன் இணைக்கப்பட்ட மொபைல்/லேப்டாப் மூலம் jeevanpramaan.gov.in என்ற அரசு இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பைச் செய்யும்போது, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உருவாக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. இந்த ஆவணத்தை ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் எளிதில் அணுகிப் பயன்படுத்திக் கொள்ளும். உமாங் (UMANG) செயலி: இந்தியக் குடிமக்களுக்கான அரசு சேவைகளை வழங்கும் UMANG செயலியில் ஜீவன் பிரமாண் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பைச் செய்தும் சான்றிதழை உருவாக்கலாம்.
நேரடி சமர்ப்பிப்பு
நேரில் சென்று சமர்ப்பிக்கும் முறை
டிஜிட்டல் முறைகளில் வசதியில்லாதவர்கள், தங்கள் அருகில் உள்ள வங்கி கிளை, அஞ்சல் அலுவலகம் அல்லது பொதுச் சேவை மையத்திற்கு (CSC) நேரில் சென்று, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துப் படிவத்தை நிரப்பி, தங்கள் ஆயுள் சான்றிதழைப் பெறலாம். உங்கள் அருகிலுள்ள CSC மையத்தைக் கண்டறிய, jeevanpramaan.gov.in என்ற இணையதளத்தில் Locate a Centre ஐக் கிளிக் செய்யலாம் அல்லது 7738299899 என்ற எண்ணுக்கு JPL என்று டைப் செய்து உங்கள் பின்கோடைச் சேர்த்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.