வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி
செய்தி முன்னோட்டம்
பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் இன்று(மே 10) காலை வாக்களித்தனர்.
"முதலில், நாம் வாக்களிக்க வேண்டும், அதன் பிறகு தான் இது நல்லது, இது நல்லதல்ல என்று நம்மால் கூற முடியும். நாம் அதைச் செய்யாவிட்டால், அவர்களை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை" என்று 76 வயதான நாராயண மூர்த்தி இன்று அதிகாலையில் வாக்களித்ததற்கு பிறகு கூறினார்.
இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
details
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு எடுத்துரைப்பது பெரியவர்களின் கடமை: நாராயண மூர்த்தி
"தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் வயதானவர்கள், ஆனால் நாங்கள் 6 மணிக்கு எழுந்து இங்கே வந்து வாக்களித்துள்ளோம். தயவுசெய்து எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வாக்களிப்பது ஜனநாயகத்தின் புனிதமான பகுதி," என்று பத்ம பூஷண் விருது பெற்ற சுதா மூர்த்தி வாக்களித்ததற்கு பிறகு கூறினார்.
"நான் எப்போதும் இளைஞர்களிடம் வந்து வாக்களிக்கச் சொல்கிறேன். அதற்கு பிறகு தான் அவர்களுக்கு பேசும் உரிமை இருக்கிறது. வாக்களிக்காமல் பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.