
மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனால் கடந்த ஒருவார காலமாக ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று(நவ.,22) இரவு முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் 373 மி.மீ. அதிகனமழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை, குன்னூர், கோத்தகிரி செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மரங்களும் விழுந்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மழை
நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
முன்னதாக, கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை செல்லும் மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நேற்று முன்தினம் முதல் இரவு நேரத்தில் துவங்கும் கனமழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
குறிப்பாக நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து சித்திரைசாவடி அணைக்கட்டு தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறப்படுகிறது.
ஆறு மற்றும் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.