'அந்தக் குழு சட்டப்பூர்வமானது அல்ல'; குரியன் ஜோசப் குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை கலைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 2025-ஆம் ஆண்டில் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது முதல் அறிக்கையை 2026 பிப்ரவரியில் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்சமயம் அரசாணை மூலம் குழு முற்றிலும் கலைக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் விளக்கம்
குழு கலைக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து அரசாணையில் விளக்கம்
ஒன்றிய - மாநில உறவுகள் தொடர்பான இந்த குழு சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்று அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் குழுவின் பணிகளுக்கும் இடையே அதிக ஒற்றுமை காணப்படுகிறது.
எனவே நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்கவும் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த உயர்மட்டக் குழுவைக் கலைப்பதாக அரசு தனது அரசாணையில் தெளிவாக விளக்கமளித்துள்ளது.
ஆரம்பகாலப் பணிகள்
குரியன் ஜோசப் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆரம்பகாலப் பணிகள்
முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைவராக செயல்பட்ட இந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றினர்.
மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மீட்டெடுப்பது மற்றும் மத்திய-மாநில நிதிப் பங்கீடு குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதையே இந்த குழு முக்கிய நோக்கமாக்கக் கொண்டிருந்தது.
இக் குழுவின் கலைப்பு அறிவிப்பு தற்சமயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
முக்கியப் பொறுப்புகள்
மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதிய முக்கியப் பொறுப்புகள்
இந்த குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் மத்திய - மாநில உறவுகள் குறித்த ஆய்வுகள் மாநில சட்ட ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களை விரிவாக ஆய்வு செய்தல் மற்றும் மாநிலத்தின் சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற அனைத்துப் பணிகளையும் இனி தமிழ்நாடு மாநில சட்ட ஆணையமே முழுமையாக மேற்கொள்ளும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் சட்ட ஆணையத்தின் செயல்பாடுகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.