கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. சம்பவ தினமான கடந்த 2004ம்ஆண்டு ஜூலை 16ம்தேதி ஆடி வெள்ளி என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் இருந்த வகுப்பறையினை நன்றாக பூட்டிவிட்டு அருகில் இருந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த கட்டிடத்தில் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் அறையில் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. பள்ளி கட்டிடம் காற்று வசதியில்லாத குறுகலான பாதைக்கொண்ட கூரையால் வேயப்பட்டிருந்த கட்டிடம் என்பதால் கண்மூடி திறப்பதற்குள் தீ மளமளவென பரவி 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விபத்து நடந்த பள்ளி வாசல் முன்பு டிஜிட்டல் பதாகை
அதன்படி இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 19ம் நினைவு நாள் இன்று(ஜூலை.,16) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி, புத்தாடை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் தீ விபத்து ஏற்பட்ட பள்ளியின் முன்பு பெற்றோர்கள் ஏற்பாடு செய்த நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, பாலக்கரை பகுதியில் உள்ள நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும், பொது மக்களும் தங்கள் அஞ்சலியினை செலுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் புகைப்படம் அடங்கிய டிஜிட்டல் பதாகை ஒன்றும் குறிப்பிட்ட அந்த பள்ளி வாசல் முன்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.