மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்தக்கோரி நேற்று(மே.,10)ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அதன்பின்னர் சென்னை கிண்டி ராஜ்பவனில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியினை சந்தித்தார். அப்போது அவர் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியினை பதவிநீக்கம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று மனு அளித்துள்ளார். தொடர்ந்து, சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூடவேண்டும் என்று கிருஷ்ணசாமி கவர்னரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் மதுபான கொள்முதல்,விற்பனை,காலி அட்டைப்பெட்டி வரை நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்தும் விசாரிக்கவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை மது கொள்முதலினை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழல் நடக்க செந்தில் பாலாஜியே காரணம் என்று குற்றச்சாட்டு
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, திராவிடமாடல் என்று பேசும் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும். இந்தாண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் மதுவிற்பனை மூலம் வந்துள்ள வரி ரூ.44,000 கோடி. அதனை அடுத்தாண்டில் ரூ.52,000கோடியாக உயர்த்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. டாஸ்மாக் துறையில் நடக்கும் ஊழலுக்கு செந்தில்பாலாஜியே காரணம். அவரின் ஒப்புதல் இல்லாமல் அங்கு ஊழல் நடக்காது. இதனால் டாஸ்மாக்நிறுவனத்தில் நடந்துவரும் ஊழலினை குறித்து கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையினை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் மற்றும் செந்தில்பாலாஜியின்'1 லட்சம் கோடி' டாஸ்மாக் ஊழல் ஆதாரங்களுடம் வெளியீடு. விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க அனுமதிகோரி கவர்னரிடம் மனு என்று குறிப்பிட்டுள்ளார்.