சாதிக்குள் திருமணம் முடிப்போம் என்று சிறுமிகளை உறுதிமொழி எடுக்க வைத்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை
திமுக கூட்டணி கட்சிகளுள் ஒன்றான கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, கவுண்டர் இனத்தைச் சேர்ந்த ஆண்களை தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கவுண்டர் இன பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் வன்னியரசு இந்த உறுதிமொழி எடுக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளில், "கல்யாணம் பண்ணிக்கிறோம்.. கவுண்டர் வீட்டு பையனையே.. இது போதும், இது போதுமே ..எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, சத்தியமே சத்தியமே, சின்னமலை சத்தியமே" என்று கே.கே.சி. பாலு முன்னிலையில் பல சிறுமிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்வது காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சாதியத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு
இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் வன்னியரசு, "சாதியக் கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.(கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலைகுனியும் பெண்களைப் பாருங்கள்)" என்று கூறியுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சாதியத்தை ஊக்குவிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு என்பவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.