பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்
தற்கொலை செய்து கொள்ள ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றவரை வேலை வாங்கி தருவதாக கூறி, பின்பு பிரியாணியை வைத்து ஆசை காட்டி கொல்கத்தா போலீஸார் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை மதியம் கொல்கத்தாவின் பரபரப்பான தெரு ஒன்றில் நிகழ்ந்ததால், சுமார் அரை மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று கராயா நிலைய காவல்துறையினர் கூறியுள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க கொல்கத்தாவை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியையும், பிசினஸையும் இழந்ததால் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வண்டியை நிறுத்தி மேம்பாலத்தின் மேல் இருந்து குதிக்க முயற்சித்திருக்கிறார்.
மகளோடு இருந்த போது தற்கொலைக்கு முயற்சி
இந்த சம்பவம் நடந்த போது, அவரது மூத்த மகளும் அவரோடு தான் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. " திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில், அவர் தனது மூத்த மகளை இரு சக்கர வாகனத்தில் சயின்ஸ் சிட்டிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பாலத்தின் அருகேவண்டியை நிறுத்திய அவர், தனது மொபைல் போன் சாலையில் எங்கோ விழுந்துவிட்டதாக கூறி, தனது மகளை சாலையிலேயே நிற்கவைத்துவிட்டு, பாலத்தின் மீது ஏறி, பின்னர் குதித்து விடுவேன் என மிரட்டினார்," என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்பு அவரது மகளிடம் பேசி விஷயத்தை தெரிந்து கொண்ட போலீசார், அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறியதுடன், பிரியாணி பாக்கெட்டை காட்டி அவரிடம் பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்திருக்கின்றனர்.