கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை
அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத் தளத்தையும், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15), ஊடகங்களின் தவறான பிரச்சாரத்தால் தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். "இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துறை எல்லாவற்றையும் செய்துள்ளது. நாங்கள் குடும்பத்தை திருப்திப்படுத்த முயற்சித்தோம், ஆனால் வதந்திகள் பரவுகின்றன. ஊடகங்களின் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தால், கொல்கத்தா காவல்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்." என்று அவர் மேலும் கூறினார். மேலும், தங்களை தவறாக சித்தரித்தாலும், குற்றவாளிகள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
நள்ளிரவு வன்முறை சம்பவம்
அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த வாரம் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழு, எதிர்ப்பாளர்கள் போல் மாறுவேடமிட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, சொத்துக்களை சேதப்படுத்தியது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சில போலீசார் காயமடைந்தனர். மேலும், போலீசாரின் சில வாகனங்கள் சேதமடைந்த நிலையில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலைக் கலைத்தனர். மேலும், சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வெளியே போதுமான எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்துள்ளதோடு, அதற்கேற்ப நிலைமையைச் சமாளிக்க அறிவுறுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.