கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு
தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்தேதி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலைச்செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து கோத்தகிரி போலீசார் 10 பேரை கைதுச்செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ட்ரைவர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அண்மையில் இந்த கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சிபிசிஐடி கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
49 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை
மேலும் விசாரணை அதிகாரிக்கு கீழ் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கொடநாடு கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பகுதியில் உள்ள ஜோதிடரையும் விசாரணை செய்யவுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன்னர் அந்த ஜோதிடரை சந்தித்துள்ளார். கனகராஜ் இறப்பதற்கு முன்னர் சந்தித்த கடைசி நபர் ஜோதிடர் என்பதன் அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.