ஜூலை 18, தமிழ்நாடு தினமாக எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?
ஆண்டுதோறும், ஜூலை-18 ,தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, இவ்வளவு கோலாகலமாக இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறார்கள் எனத்தெரியுமா? அதற்கான காரணம் என்ன? 1967-ம் ஆண்டிற்கு முன்னால் வரை, மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது நமது மாநிலம். சுதந்திரத்திற்கு முன், மெட்ராஸ் மாகாணம் என்பது, இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, 1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை `மதராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் `மதராஸ் ஸ்டேட்' ஆனது.
மூதறிஞர் அண்ணாவின் முயற்சியால் 'தமிழ்நாடு' என பெயர்சூட்டப்பட்டது
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் நம் மாநிலத்தை, மெட்ராஸ் மாகாணம் என்றே குறிப்பிட்டு வந்தனர். பல அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ராஜ்யசபாவுக்கு சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவும், "Call my State TAMIL NADU" என அறிவுறுத்தினார். 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, அன்றைய முதல்வர் அண்ணாவே, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான தனி மசோதா நிறைவேற்றினார். அன்று முதல் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என பெயர் சூட்டபட்டது. அதனால் தான், வருடந்தோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படுகிறது