LOADING...
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2025
09:26 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமை காரணமாக சிலர் தங்களது சிறுநீரகங்களை விற்ற விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த மோசடியில் திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடர்புடையதாக தெரியவந்தது. மருத்துவ முறைகேடுகள் குறித்து விசாரிக்க சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில், மனித உறுப்பு மாற்று சட்டம், 1994க்கு எதிராக, நெருங்கிய உறவினர்கள் அல்லாத நபர்களிடமிருந்து பணம் கொடுத்து சிறுநீரகங்களை பெற்றது உறுதி செய்யப்பட்டது.

உரிமம் ரத்து

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசின் அறிவிப்பு

குற்றச்சாட்டு தொடர்புடைய இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் வழியே நடவடிக்கை எடுக்கப்படும். தரகர்கள் ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அளவில் புதிய அங்கீகார குழு அமைக்கப்பட்டு, மாவட்டக் குழுக்களை மேற்பார்வை செய்யும் திட்டம் உருவாக்கப்படும். மருத்துவமனைகளின் ஆவணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்; முறைகேடுகள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்புத் தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், மாநிலத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகளை உறுதி செய்வதற்கானவை என அரசு தெரிவித்துள்ளது.