
ஏப்ரல் இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்தியா வர உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்த மாத இறுதியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இந்தியாவிற்கு வர உள்ளனர்.
இது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு வருகைகளும் தற்காலிகமாக ஏப்ரல் 21 முதல் 25 வரை திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வருகையின்போது தற்போது நடந்து வரும் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தனது மனைவி உஷா வான்ஸுடன் வரும் ஜே.டி.வான்ஸ், அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற்கொண்ட பிறகு, தனிப்பட்ட சுற்றுப் பயணத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
இந்திய வருகை
அடுத்தடுத்து இந்தியா வரவுள்ள அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள்
ஜே.டி.வான்ஸை தொடர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அனந்தா மையம் நடத்தும் இந்தியா-அமெரிக்க மன்றத்தில் பங்கேற்று, பின்னர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் மூலோபாய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
பின்னர் இருவரும் டெல்லியில் நடைபெறும் டிராக்-II உரையாடல்களில் ஒன்றாக இணைவார்கள்.
இது மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் இந்திய பயணங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இறுதியாக இந்தியா வருவார் எனக் கூறப்படுகிறது.