கேரளாவில் அழகுசாதன கிரீம் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு எதிரொலி: அரசின் அதிரடி நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் எவ்வளவு பெரிய உயிராபத்தை விளைவிக்கும் என்பதற்கு கேரளாவில் நிகழ்ந்துள்ள சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட சிவப்பழகு கிரீமை பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த கிரீமில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருந்தது ஆய்வகச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, மாநிலம் முழுவதும் போலி அழகுசாதன பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
நச்சு கிரீம்
மூலப்பொருள் விவரம் இல்லாமல் விற்கப்பட்ட நச்சு கிரீம்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தை குறைக்கும் என இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட கிரீமை அந்த சிறுமி வாங்கிப் பயன்படுத்தியுள்ளார்.
அந்த பொருளின் உறையில் துபாய் முகவரி மட்டுமே இருந்ததாகவும், மூலப்பொருட்கள் பட்டியலில் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
பாதரசம் கலந்திருப்பது தெரிந்திருந்தால் அதனை ஒருபோதும் பயன்படுத்தியிருக்க மாட்டோம் என்று கூறும் அவர், இந்தப் பாதிப்பிற்காக தனது குடும்பத்தினர் இதுவரை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவு செய்துள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் முகப்பருக்கள் மறைந்து நல்ல பலன் தெரிந்ததால் அதனை நிறுத்த முடியாமல் தொடர்ந்து பயன்படுத்தியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எச்சரிக்கை
சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்ட விதமும் மருத்துவர்களின் எச்சரிக்கையும்
ஓராண்டு காலம் அந்த கிரீமை பயன்படுத்திய நிலையில், சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அல்புமின் புரதம் வெளியேறுவது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் அவருக்கு மெம்ப்ரனஸ் நெப்ரோபதி எனப்படும் தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
சம்மந்தப்பட்ட கிரீமை பரிசோதித்ததில், அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு மில்லியனுக்கு ஒரு பங்கு என்பதற்கு பதிலாக, 12,500 பங்கு பாதரசம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதால் அடுத்த ஓரிரு ஆண்டுகள் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள போதிலும், தாமதித்திருந்தால் நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருக்கும் என எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று பிரபல பாடகர் சலீம் கொடத்தூரும் பத்தாண்டுகளுக்கு முன்பு சிவப்பழகு கிரீம் பயன்படுத்தி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரவு
கேரள சுகாதாரத் துறை அமைச்சரின் உத்தரவு
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கேரள மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பொருட்கள் மற்றும் புரதப் பொடிகள் மீது தீவிர சோதனை நடத்த சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வழியாகவும், மங்களூரு-காசர்கோடு எல்லை பகுதிகள் மூலமாகவும் இணையதளம் வழியாகத் தரமற்ற மற்றும் தயாரிப்பாளர் விவரம் இல்லாத பொருட்கள் கேரளாவிற்குள் கொண்டு வரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் கேரள காவல்துறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
சமூக வலைதள விளம்பரதாரர்களுக்கும் சட்ட நடவடிக்கை
கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலப் பாதிப்புகள் மற்றும் தோல் புற்றுநோயை உருவாக்கும் இத்தகைய நச்சுப் பொருட்களை பணம் பெற்றுக்கொண்டு சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் விலாகர்கள் மற்றும் பிரபலங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், தசை மற்றும் உடல் வலிமையை அதிகரிப்பதாக பொய்யான வாக்குறுதிகளுடன் விற்கப்படும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
இதுபோன்ற கிரீம்களை பயன்படுத்துவோர் உடனடியாக அவற்றை நிறுத்திவிட்டு, ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்தால் தயங்காமல் குடும்பத்தினரிடம் தெரிவித்து மருத்துவ ஆலோசனை பெறுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.