கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன், தனது தாய் மற்றும் அவரது பார்ட்னருடன் பிரிட்டனில் (UK) வசித்து வந்தான். அங்கு சிறுவனின் தாய் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது சிறுவனின் தாயின் காதலன், சிறுவனுக்குத் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வீடியோக்களைக் காட்டி, அதில் சேருமாறு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புகார்
சிறுவனின் பெரியப்பா கேரளா போலீசிடம் புகார் அளித்துள்ளார்
இது குறித்து அந்தச் சிறுவன் தனது பெரியப்பனிடம் தெரிவித்தபோது, தனது தாய்க்கும் இந்தத் தூண்டுதல் குறித்துத் தெரியும் என்றும், அவர் தனது காதலரின் செயலை ஆதரித்ததாகவும் கூறியுள்ளான். சிறுவனின் பெரியப்பா அவனை கேரளாவுக்கு திரும்ப அழைத்து வந்து, தனது அண்ணி மற்றும் அவரது காதலரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறை UAPA பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், சிறுவனின் தாய், குடும்ப தகராறு காரணமாக தன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகக் கூறி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கு, தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களைத் தூண்டுதல் என பல கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.