ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற போலீஸ்: நாடு தழுவிய போராட்டத்தை நடத்துமா காங்கிரஸ்
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்ட 'பாலியல் துன்புறுத்தலால்' பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு CP(சட்டம் மற்றும் ஒழுங்கு) குழு ராகுல் காந்தியின் இல்லத்திற்கு நேற்று(மார் 19) சென்றது. இதையடுத்து, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன், இதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார். "ராகுல் காந்தியின் வீட்டுக்கு காவல்துறையை அனுப்பி அவரை அவமானப்படுத்தும் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்." என்று அவர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது: வி.டி.சதீசன்
" இந்திய மக்களின் அன்புக்குரிய தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறையினரை அனுப்பி அவரை அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் மக்களால் எதிர்க்கப்படும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறையை அனுப்பி இதுபோன்ற நாடகம் நடத்துவது அரசு எவ்வளவு பலவீனமாகவும், கோழையாகவும் இருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம். ராகுல் காந்தியை பார்த்து நரேந்திர மோடி அரசு எந்தளவுக்கு பயப்படுகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு." என்று வி.டி.சதீசன் கூறியுள்ளார். "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அவரிடம் இருந்து விவரங்களைப் பெற முயற்சிக்கிறோம்" என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்த சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு சிபி சாகர் ப்ரீத் ஹூடா கூறி இருந்தார்.