அந்த வீடியோதான் உயிரைப் பறித்ததா? கேரள வாலிபர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! பெண் சிக்கியது எப்படி? முழு விவரம்!
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பேருந்தில் பயணித்த போது ஒரு வாலிபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, ஒரு பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சுமார் 20 லட்சம் பார்வைகளைப் பெற்ற அந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாலிபர், ஜனவரி 18 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெண் கைது
தற்கொலைக்குத் தூண்டியதாகப் பெண் கைது
வாலிபரின் தற்கொலையைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட அந்தப் பெண்ணை கேரளா போலீஸார் ஜனவரி 21 அன்று கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 109 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நீதிமன்றம் அந்தப் பெண்ணை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
இந்தச் சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது: விசாரணை அறிக்கை: வடமண்டல டிஐஜி ஒரு வாரத்திற்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பிப்ரவரி 19 இல் விசாரணை: இந்த வழக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஆணையத்தின் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வாலிபர் தவறான குற்றச்சாட்டின் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது குறித்துப் புகார்கள் எழுந்துள்ளன.
உறவினர்கள்
உறவினர்களின் குமுறல்
தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த மாதம் தொடக்கத்தில் வேலை நிமித்தமாக அவர் கண்ணூருக்குச் சென்றபோதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ வெளியான பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஒருவரைப் பற்றிய உண்மையை அறியாமல் பரப்பப்படும் வீடியோக்கள் ஒரு உயிரையே பறிக்கக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது.