Page Loader
மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு
கவிதா தாக்கல் செய்த மனு, மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு

எழுதியவர் Sindhuja SM
Mar 15, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதா தாக்கல் செய்த மனு, மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி.) கவிதாவின் மனுவை மார்ச் 24-ம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்டது. மார்ச் 11 அன்று, அறிக்கையை பதிவு செய்ய ED முன் ஆஜரான பிஆர்எஸ் தலைவர் கவிதா, மீண்டும் மார்ச் 16 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

ஒரு பெண்ணை அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு அழைக்கலாமா?

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட கவிதாவின் வழக்கறிஞர், "ஒரு பெண்ணை அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு அழைக்கலாமா? அது சட்டத்திற்கு புறம்பானது" என்று கூறியுள்ளார். மார்ச் 11 அன்று, பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவிடம் அமலாக்க இயக்குனரகம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியது. மூன்றாவது முறையாக, மார்ச் 16-ம் தேதி அவர் மீண்டும் அமலாக்க இயக்குனரகத்திற்கு வர வேண்டும் என்று ED சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார். டெல்லியின் ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையை வடிவமைத்ததில் ஊழல் செய்ததாக மத்திய புலனாய்வுப் பிரிவினர்(சிபிஐ) அவரை கைது செய்துள்ளனர்.