காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
ஜம்மு & காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான கெரன் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நலத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் கிரால்போரா மாவட்ட துணை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமாகவோ அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலைமை குறித்து அந்த கிரால்போரா மாவட்ட துணை மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான பர்வைஸ்'க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிறந்த அழகான பெண் குழந்தை
இதனையடுத்து வீட்டில் இருந்தபடியே, பர்வைஸ் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆரம்ப சுகாதார மைய மருத்துவரான அர்சாத் சோபி'க்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அந்த அறிவுறுத்தல்களின் படி, மருத்துவர் அரசாத் சோபி செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார். கிட்டத்தட்ட 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த பிரசவத்தில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக சுகாதார நிலைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளார்கள். இது போன்ற அவசர காலத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் நடந்த இந்த பிரசவம் அப்பகுதியில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.