
கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்
செய்தி முன்னோட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தவெகவின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் இருந்து தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த இந்தக் கோரச் சம்பவம், மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்ட நெரிசல் குறித்துப் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தவறான நிர்வாகமே காரணம் எனக் காவல்துறை ஏற்கெனவே தவெக அமைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணை
சுதந்திரமான விசாரணை
இந்தச் சூழ்நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் விசாரணை நடுநிலையாக இருக்காது என்றும், எனவே உண்மைகள் வெளிவர சுதந்திரமான மத்திய நிறுவனத்தின் விசாரணை அவசியம் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான உண்மையான நிர்வாக அலட்சியம் மற்றும் அரசியல் ரீதியான தலையீடுகள் குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் சிபிஐ விசாரணை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையை தவெக நிர்வாகிகள் நாடிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்றே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.