கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?
செய்தி முன்னோட்டம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கை விசாரிக்க இவர் நியமிக்கப்பட்டிருப்பது, அவர் யார் என்பதை அறிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஸ்ரா கார்க் 2004 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், தனது படிப்பில் சிறந்து விளங்கி, குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார்.
பொறுப்புகள்
முக்கிய பொறுப்புகள்
தனது நீண்ட பணிக்காலத்தில், சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கு, சைபர் குற்றப்பிரிவு உட்படப் பல முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். குறிப்பாக, திருவள்ளூர், மதுரை, வேலூர் போன்ற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது, கடுமையான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக இவர் நன்கு அறியப்பட்டவர். முக்கியமான சட்டவிரோதச் செயல்கள், கொள்ளை, கடத்தல் மற்றும் சட்டம் சார்ந்த சிக்கலான வழக்குகளில் இவர் திறமையுடன் செயல்பட்டுள்ளார். தற்போது, இவர் தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் ஐஜி பொறுப்பில் உள்ளார். கரூர் வழக்கில், கூட்டம் நடத்தப்பட்ட விதம், பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து அஸ்ரா கார்க் தலைமையிலான குழு ஆராயும்.