
கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு
செய்தி முன்னோட்டம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா, இயக்குநர் ரவிவர்மா உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆய்வைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆணைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் இணைந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கும் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என்று தெரிகிறது.
சிபிஐ
சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. என்.ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், கடந்த ஒரு வாரமாகத் தலைமறைவாக இருக்கும் என்.ஆனந்த்தைத் தேடும் பணி மேலும் தீவிரமடைந்துள்ளது. மேலும், நாமக்கல்லில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியானதால், அவரையும் கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.