கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் ஆகிய இரண்டும் வருகிற 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். "பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும், தலைவர் கலைஞர் அவர்களுடைய புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7-00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார் முதல்வர்.
எதிர்க்கட்சிகளுக்கும், பொதுமக்களும் அழைப்பு விடுத்த முதலமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் தொடர்ந்து,"எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம். முடிவெடுத்திருக்கிறோம்". "ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார். அதோடு, இதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.