Loading...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது: உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது: உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றம்

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

உச்சநீதிமன்றத்தின் திட்டவட்டமான உத்தரவைத் தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவ. 28) மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, கார்த்திகை தீபத்திருநாளன்று மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தபோதிலும், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அதனை நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாகத் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

400 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு

உச்சக்கட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த திருப்பரங்குன்றம் மலை

இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர், சிஆர்பிஎப் ஐஜி மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட்டபோது, "முருகனுக்கு அரோகரா" என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட கூடுதல் படைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT