காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு
வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு(CWRC) இன்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 89வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த அந்த குழு, தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா 13,000 கன அடி தண்ணீரை(16.90 டி.எம்.சி. வரை) திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த முறை தண்ணீர் திறந்துவிடப்படுமா?
ஆனால், காவிரியில் இருந்து திறந்துவிட போதுமான தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு கூறியிருந்தது. மேலும், 4 காவிரி நீர்த்தேக்கங்களுக்கும் நீர்வரத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருப்பதால், மாநிலம் அதன் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம்(CWMA) அறிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசு CWRCயிடம் கேட்டுக்கொண்டது. இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த காவிரி குழு, இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேபோல், கடந்த மாதம் 5,000 கன அடி தண்ணீரைத் திறக்குமாறு கர்நாடக அரசிடம் CWRC கேட்டுக்கொண்டது. ஆனால், கர்நாடகாவின் காவிரிப் படுகையில் வறட்சியின் தீவிரம் அதிகரித்து வருவதை சுட்டி காட்டிய கர்நாடக-அரசு, நீர்த்தேக்கங்களில் தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டது.