தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு
கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்குள்ள கபினி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு கபினி, கே.எஸ்.ஆர்.அணைகளிலிருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில், நேற்று(ஜூலை.,25) மதியம் 2 மணியளவில் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு 2,000 கனஅடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று(ஜூலை.,26) காலை 6 மணியளவில் நீர் வரத்து வினாடிக்கு 5,100 கனஅடியாக அதிகரித்த நிலையில், 10.30 மணியளவில் 7,500 கனஅடியாக உயர்ந்தது. தற்போது 12,000 கனஅடியாக நீரின் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
தொடர்ந்து அதிகரித்து வரும் நீரின் அளவு
நீரின்வரத்து அதிகரித்த காரணத்தினால் ஒகேனேக்கல் பகுதியிலுள்ள மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, நாளை(ஜூலை.,27)மாலைக்குள் இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து பிலிகுண்டுலுக்கு வரும் நீரின்அளவு 17,000 கனஅடியாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது. மழையின் தீவிரம் காரணமாக நீரின் அளவு எவ்வளவு அதிகரிக்கும் என்று சரியாக நிர்ணயிக்க முடியாத பட்சத்தில், ஒக்கனேக்கல், ஊட்டமலை பகுதிகளில் ஆற்றில் குளிக்கையில் கவனத்துடன் குளிக்கவும் என்று ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.