வரதட்சணைக் கொடுமை புகார்: கர்நாடக ஆளுநர் வீட்டு மருமகள் மாமியார் மீது அதிர்ச்சிப் புகார்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் பேரனின் மனைவி, வரதட்சணைக் கோரித் தனது மாமியார் குடும்பத்தினரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். தேவேந்திர கெலாட் என்பவரின் மனைவி திவ்யா கெலாட், மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். தனது கணவர், மாமனார் (முன்னாள் எம்எல்ஏ ஜிதேந்திர கெலாட் உட்பட), மற்றும் குடும்பத்தினர் வரதட்சணையாக ₹50 லட்சம் கோரித் தன்னைத் துன்புறுத்துவதாகவும், உணவுகூட மறுக்கப்படுவதாகவும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜனவரி 26 அன்று நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தை அவர் விவரித்துள்ளார். அதில், போதையில் இருந்த தனது கணவர் தேவேந்திரா, பணத்திற்காக வற்புறுத்தி, தன்னைக் கூரையில் இருந்து கீழே தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
படுகாயம்
கீழே தள்ளியதில் படுகாயம்
இதில் படுகாயமடைந்த திவ்யா, மறுநாள் காலையில்தான் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், தனது கணவர் போதைக்கு அடிமையானது, முறையற்ற உறவுகள் போன்ற பல விவரங்கள் திருமணத்தின்போது மறைக்கப்பட்டதாகவும் திவ்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரிடம் இருந்து பணத்தை வாங்கி வரும் வரை, தனது 4 வயது மகளைப் பார்க்க முடியாது என்று கணவர் மிரட்டுவதாகவும், இதனால் 4 வயது மகளைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகார்கள் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.