கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
பாலாறு என்னும் வனப்பகுதி தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளது. இங்கு காவிரியும், பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பரிசல்களில் சென்ற தமிழக மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதிக்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பரிசலில் இருந்த சிலர் தப்பி கிராமங்களுக்குள் சென்றுவிட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்தையடுத்து கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை என்று தகவல்கள் வெளியானது.
இரு மாநில எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது
இதனையடுத்து அவர் கடந்த செவ்வாய்கிழமை கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாலாற்றின் கரை பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே பாலாற்றின் கரையில் நின்று கொண்டிருந்த பரிசல்களையும், வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று(பிப்.,15) பரிசல் மூலம் சென்று கர்நாடக வனத்துறையினர் பாலாற்றின் கரையில் நடந்த துப்பாக்கி சூட்டில் யாரேனும் பலியாகி கிடக்கிறார்களா என தேடி பார்த்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரு மாநில எல்லை பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.