LOADING...
கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்
DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்

கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
08:15 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர். இது, மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகளை இன்று நிறைவு செய்ததை அடுத்து, டி.கே. சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குழு ஒன்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. 2023 சட்டமன்றத்தேர்தலுக்குப் பிறகு, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்காக நடந்த தீவிர பேச்சுவார்த்தையின் போது, இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக முன்னர் தகவல் வெளியானது.

சந்திப்பு

மூத்த தலைவர்களை சந்திக்கவிருக்கும் MLA க்கள்

இந்த எம்.எல்.ஏக்கள் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை சந்தித்துத் தங்கள் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர். தனது ஆதரவாளர்கள் டெல்லி சென்றது குறித்து கருத்து தெரிவித்த டி.கே. சிவகுமார், தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், யாரையும் தான் அனுப்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், சித்தராமையா தொடர்ந்து முதல்வராக இருப்பது குறித்துத் தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் தெரிவித்துள்ளார். மறுபுறம், முதல்வர் சித்தராமையா, "முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு வெறும் ஊடகங்களின் யூகமே. கட்சியை மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் எந்த 'புரட்சியோ' அல்லது 'குழப்பமோ' இல்லை" என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.