LOADING...
கர்நாடக அரசியலில் மெகா திருப்பம்! நாளை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா?
சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்தி

கர்நாடக அரசியலில் மெகா திருப்பம்! நாளை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா?

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
07:19 am

செய்தி முன்னோட்டம்

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிய முதலமைச்சராகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளதாகவும் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் நாற்காலிக்கு கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, 5 ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சித்தராமையாவை முதலமைச்சராக்கியது. அந்த 3 ஆண்டு காலக்கெடு தற்போது நிறைவடைவதை அடுத்தே இந்த அதிரடி தலைமை மாற்றம் அரங்கேறுகிறது.

சந்திப்பு

டெல்லியில் நடந்த 'ஹை-வோல்டேஜ்' மீட்டிங்

நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் தலைமை மாற்றத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

என்ன நடந்தது

சித்தராமையாவைச் சம்மதிக்க வைத்த காங்கிரஸ் மேலிடம் எப்படி?

கர்நாடகாவின் செல்வாக்குமிக்க ஓ.பி.சி (OBC) தலைவரான சித்தராமையாவின் அரசியல் கௌரவம் பாதிக்காத வகையில், அவருக்குப் பின்வரும் சலுகைகளை வழங்க ராகுல் காந்தி உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, வரும் 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, காங்கிரஸின் தேசிய அளவிலான முக்கிய ஓ.பி.சி முகமாக சித்தராமையா முன்னிறுத்தப்படுவார். விரைவில் அவர் ராஜ்யசபா (மாநிலங்களவை) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி அரசியலுக்கு அழைக்கப்படுவார். கர்நாடக அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் கட்சியின் முக்கிய முடிவுகளில் சித்தராமையாவின் பரிந்துரைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement