LOADING...
X தளத்தில் வைரலான மாணவனின் பதிவு! பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE
பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE

X தளத்தில் வைரலான மாணவனின் பதிவு! பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
09:37 am

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ் 2 (Class 12) பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் குளறுபடி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆன்லைன் மறுமதிப்பீட்டுத் தரவிறக்க முறையில் வேறொரு மாணவனின் இயற்பியல் (Physics) விடைத்தாள் மாற்றி அப்லோடு செய்யப்பட்டதை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் உடனடியாக மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வைரல் பதிவு

X தளத்தில் வைரலான மாணவனின் குமுறல்

வேதாந்த் என்ற மாணவர் கடந்த மே 23 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்ட சில ஆதாரங்கள் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தனது இயற்பியல் மதிப்பெண்ணில் அதிருப்தி அடைந்த வேதாந்த், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, தனது விடைத்தாளின் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அதைத் திறந்து பார்த்தவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது "சிபிஎஸ்இ இணையதளத்தில் எனது ரோல் எண்ணின் கீழ் அப்லோடு செய்யப்பட்டிருந்த பிசிக்ஸ் விடைத்தாள் என்னுடையதே அல்ல! அது வேறொரு மாணவனின் விடைத்தாள். இதைப் பார்த்ததும் என் எதிர்காலமே சிதைந்துவிட்டது போல் உணர்ந்தேன். இந்த மதிப்பெண் குளறுபடியால் எனது கல்லூரி சேர்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று வேதாந்த் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

விளக்கம்

CBSE வாரியம் அளித்த விளக்கம் மற்றும் திருத்தம்

மாணவனின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட சிபிஎஸ்இ நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயற்பியல் விடைத்தாள் மாறியதை ஏற்றுக்கொண்டது. இதுமட்டுமின்றி, வேதாந்த் எழுப்பிய புகாரின் அடிப்படையில் மற்றொரு மாணவனின் வேதியியல் (Chemistry) விடைத்தாளிலும் இதே போன்ற குளறுபடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிபிஎஸ்இ வாரியத்தின் இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பு பிரிவு), மாணவர் வேதாந்திற்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வேதாந்தின் உண்மையான இயற்பியல் விடைத்தாள் நகல் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சரியான மதிப்பெண்களின்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மிக விரைவில் திருத்தி மாற்றியமைக்கப்பட்டு புதிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Advertisement