மாடல் ட்விஷா சர்மா மரண வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தரவால் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் மாடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ஆம் தேதி மாமனார் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் பெரும் திருப்பமாக, உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரணையை முறைப்படி தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. ட்விஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வழக்கை உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லியில் இருந்து வந்த சிபிஐ சிறப்புப் படை போபால் போலீசாரிடமிருந்து வழக்கை மாற்றி, புதிய எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
எஃப்ஐஆர்
புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர்
இந்தியாவில் அண்மையில் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் (ஓய்வு பெற்ற நீதிபதி) ஆகிய இருவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பிரிவு 80(2) BNS: வரதட்சணை மரணம் பிரிவு 85 BNS: கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடூரம் பிரிவு 3(5) BNS: கூட்டுச் சதி / பொதுவான நோக்கம் பிரிவு 3 & 4 வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961
வாதம்
'நரகத்தில் வாழ்ந்த மகள்:நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
உச்ச நீதிமன்ற விசாரணையின் போது மத்தியப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் அனுபவித்த சித்திரவதைகளை விவரித்தார். "அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பார்க்கும்போது அந்தப் பெண் திருமணமான இந்த 6 மாதங்களும் நரகத்தில் வாழ்ந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெற்றோருக்கு விவாகரத்தான மகள் உயிரோடு இருப்பது, வரதட்சணைக் கொடுமையால் மகள் பிணமாகத் திரும்புவதை விட மேலானது". "மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற பெண் நீதிபதி கிரிபாலா சிங், ஊடகங்களுக்குப் பேட்டியளித்து இறந்த பெண்ணின் நடத்தையைத் தவறாக சித்தரித்து வருகிறார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்" என துஷார் மேத்தா வாதிட்டார்.
பிரேதப் பரிசோதனை
எய்ம்ஸ் மருத்துவர்களின் 2-வது பிரேதப் பரிசோதனை
போபால் போலீசார் நடத்திய முதல் பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என ட்விஷாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தலைமையிலான குழுவினர் துவிஷாவின் உடலைத் தோண்டி எடுத்து 2-வது முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். ட்விஷாவின் இடது கையில் உள்ள காயங்கள், கழுத்தில் உள்ள சுருக்குக் கயிற்றின் தழும்புகள் மற்றும் உடலில் விஷம் ஏதேனும் செலுத்தப்பட்டதா என்பதை அறிய விஸரா (Viscera) மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முழு அறிக்கை விரைவில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுவரை
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
இதற்கிடையில், தலைமறைவாக இருந்து மே 22 அன்று ஜபல்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர் சமர்த் சிங் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். முன்ஜாமீன் பெற்றுள்ள மாமியார் கிரிபாலா சிங்கின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மே 27 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வரவுள்ளது. சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதால் இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.